மும்பை,
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில் ஒன்று நேற்று காலை 9.30 மணியளவில் பிவ்புரி- கர்ஜத் இடையே வந்தபோது, தண்டவாளத்தில் பயங்கர சத்தம்கேட்டது. மேலும் ரெயிலும் குலுங்கியது. இதனால் உஷாரான மோட்டார் மேன் உடனடியாக ரெயிலை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவந்து பார்த்தார். அப்போது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்டவாள விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் அந்த வழித்தடத்தில் வந்த ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இந்தநிலையில் விரிசல் சரி செய்யப்பட்டு சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு அந்த வழியாக மீண்டும் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன.
தண்டவாள விரிசல் காரணமாக நேற்று காலை மத்திய ரெயில்வே வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இது குறித்து மத்திய ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் கூறுகையில், பிவ்புரி- கர்ஜத் இடையே ஏற்பட்ட தண்டவாள விரிசல் காரணமாக கர்ஜத்- சி.எஸ்.எம்.டி., தானே இடையே 20 முதல் 25 நிமிடங்கள் வரை மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது என்றார்.