நாற்று நடும் போராட்டம் நடத்த முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்

சாலை பணியை விரைந்து முடிக்க கோரி நாற்று நடும் போராட்டம் நடத்த முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் அடிக்காமலை கிராமத்தில், தா.பழூர்-தாதம்பேட்டை சாலை கொள்ளிடக்கரை வரை 5 கிலோ மீட்டர் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மேலக்குடிகாடு, அடிக்காமலை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் இந்தசாலையில் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் இந்த சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவமும் நடந்து வருகிறது. சாலையின் இருபுறங்களில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.

தற்போது பெய்துவரும் மழையால் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறி முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ள இந்த சாலையை சீரமைத்து இருபுறமும் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார்ச்சாலை மற்றும் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சாலை போடும் பணியும், பாலம் கட்டும் பணியும் தாமதமாக நடந்து வருகிறது. இதனால் இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் சாலை அமைக்கும் திட்டம் ஆரம்பித்து 8 மாத காலமாகியும் பணி தாமதமாக நடந்து வருகிறது. எனவே இதனை விரைந்து முடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்தது. மேலும் சாலை பணியை விரைந்து முடிக்கா விட்டால் நேற்று சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தா.பழூர்-தாதம்பேட்டை சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்த ஒன்று கூடினர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் அதிகாரி காமராஜ், கிராம நிர்வாக அதிகாரி சண்முக கார்த்திகேயன், தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், உதவி பொறியாளர் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 20-ந் தேதிக்குள் சாலை பணிகளை விரைந்து முடித்து தருவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com