கொச்சியில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசார் மீது போலீஸ் தடியடி; 20 பேர் கைது

கொச்சியில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தியதில் 8 பேர் காயம் அடைந்த. மேலும் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
Published on

பெரும்பாவூர்,

கேரள மாநில கலால்துறை மந்திரியாக இருக்கும் ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்யக்கோரி கலால்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக இளைஞர் காங்கிசார் அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் எர்ணாகுளம் நகரில் திரண்டு இளைஞர் காங்கிரசார் மாநில தலைவர் டீன்குரியாகோஸ், எர்ணாகுளம் மாவட்ட தலைவர் ரஜீஷ் ஆகியோர் தலைமையில் கேரள காங்கிரஸ் மாநில செயலாளர் எம்.ஏ.அப்துல்மொகலிப், முன்னாள் மேயர் டோனி சிம்னி, காங்கிரஸ் நிர்வாகிகள் பி.ஜி.சுனில், நிதின்ஜாய், அஜித்அமீர் பாவா, ஈ.எஸ்.சுபீஷ் உள்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு ஊர்வலமாக வந்தனர்.

இதையொட்டி இணை ஆணையர் அலுவலகம் முன்பு எர்ணாகுளம் மத்திய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அனந்தலால் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்போது ஊர்வலமாக வந்த இளைஞர் காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அவர்கள் தடுப்பு வேலிகளை அகற்றி விட்டு அலுவலகத்தின் உள்ள நுழைய முயன்றனர்.

உடனே போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதில் 8 பேர் காயம் அடைந்தனர். மேலும் போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அனந்தலாலுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனே காயம் அடைந்தவர்களை எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 20 பேரை கைது செய்தனர். இளைஞர் காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் எர்ணாகுளம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com