கொல்கத்தா,
போலந்து நாட்டை சேர்ந்த கமில் சியட்சின்ஸ்கி என்ற மாணவர் மேற்கு வங்காளத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். அப்போது உள்ளூர் பத்திரிகை ஒன்று இவரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டது.
இந்த செய்தியை ஒருசிலர் புகைப்படம் எடுத்து அங்குள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவர் கமிலை அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அவரை நாட்டை விட்டு 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டு உள்ளனர்.
ஆனால் எந்தவித அரசியல் கட்சியையும் சாராத மாணவர் கமில், வெறும் ஒரு பொழுதுபோக்குக்காகவே பேரணியில் கலந்து கொண்டதாகவும், அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்திருப்பதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்ட படங்களை பகிர்ந்திருந்த வங்காளதேச மாணவி ஒருவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.