அ.தி.மு.க. மாநிலங்களவை வேட்பாளர் தம்பிதுரை - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பா.ம.க.விற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. மாநிலங்களவை வேட்பாளர் தம்பிதுரை - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், தி.மு.க.விற்கான 4 இடங்களில் 2 இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்ற 2 இடங்களில் தே.மு.தி.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான மாநிலங்களவை வேட்பாளரை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.க.விற்கான மாநிலங்களவை வேட்பாளராக தம்பிதுரையின் பெயரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தம்பிதுரை ஏற்கனவே மத்திய மந்திரியாகவும், மக்களவை துணை சபாநாயகராகவும் இருந்தவர் ஆவார். தற்போது அவர் 7-வது முறையாக எம்.பி. ஆக உள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மு.தம்பிதுரை, M.A., Ph.D., M.P., கழக கொள்கை பரப்புச் செயலாளர் முன்னாள் மத்திய மந்திரி, தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com