கூட்டணி விவகாரம்: மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியின் முடிவே இறுதியானது - அமைச்சர் ரகுபதி

காங்கிரசில் கிரிஷ் சோடாங்கர் பேசுவது பற்றி எங்களுக்கு கருத்து இல்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கூட்டணி விவகாரம்: மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியின் முடிவே இறுதியானது - அமைச்சர் ரகுபதி
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் நேரத்தில் எதை வேண்டுமானாலும் அறிவித்து போகின்ற பழக்கம் உள்ளது. ஆனால் அறிவித்ததை எல்லாம் நிறைவேற்றுகின்ற பழக்கம்தான் தி.மு.க.விற்கு இருக்கிறது. எங்களை பொறுத்த வரை எடப்பாடி பழனிசாமி ரூ.10 ஆயிரம் அல்ல, ரூ.1 லட்சம் கூட அறிவிப்பார். ஏன் ரூ.10 ஆயிரம் அறிவித்தார் என்று தெரியவில்லை. அவரால் கொடுக்கவும் முடியாது, ஆட்சிக்கு வரவும் முடியாது.

காங்கிரசில் கிரிஷ் சோடாங்கர் பேசுவது பற்றி எங்களுக்கு கருத்து இல்லை. கூட்டணியை பொறுத்தவரை ராகுல்காந்தியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பேசுவதுதான் முடிவு, அதுதான் இறுதி. நிச்சயமாக எந்த காலத்திலும் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற நல்ல உள்ளம்தான் மு.க.ஸ்டாலினிடம் இருக்கிறது. எந்த காலத்திலும் அவருக்கு கெடுதல் வராது. திராவிட மாடல் ஆட்சி 2-வது முறை மட்டுமல்ல, 3-வது முறையும் தொடரும்.

புதிய புதிய கட்சிகள் தேர்தலுக்கு வருவதால் எங்களுக்கு இன்னும் பலமும் சக்தியும் அதிகரித்துள்ளது. புதுசா கட்சி தொடங்கியவர்களை பற்றி எல்லாம் கவலையே இல்லை, அதெல்லாம் புதுக்கட்சி, அவங்களுக்குத் தேர்தல் வேலைகள் என்றால் என்ன என்பதையும் முதலில் பூத் கமிட்டி போட்டு கற்றுக் கொள்ளட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கூட்டணி விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “அறிவாலயத்துக்குப் பக்கத்தில் டீ குடிக்க வருபவர்களை எல்லாம் கூட்டணிக்குக் கூப்பிடும் அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால் அப்படிப் பேசியவர்களுடைய நிலைமை அப்படி இருக்கலாம். ஏன் என்றால் அவர்கள்தான் ஈ ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள், யாரு வருவார்கள் என்று கதவைத் திறந்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் யாரும் டீ குடிக்க வருபவர்களை கூப்பிட்டு வச்சு பேச வேண்டிய அவசியம் திமுக கூட்டணிக்கு இல்லை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதனால் யார் வேண்டுமானாலும் திமுக கூட்டணிக்கு வரலாம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com