புதுச்சேரியில் கூட்டணி இழுபறி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
புதுச்சேரியில் கூட்டணி இழுபறி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு
Published on

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். கடந்த முறைபோல, வருகிற சட்டசபை தேர்தலிலும் நீண்ட இழுபறிக்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஆனால் கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது, கூடுதல் தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதில் இரு கட்சியினருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் இன்னமும் சவ்வு மிட்டாய் போல் இழுத்து வருகிறது.

தி.மு.க.வினர் ஒருபுறம் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை அழைத்து தனியாக பேச்சு வார்த்தை நடத்தியது. கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க. இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு தொடர்பாக சுமுக உடன்பாடு எட்டப்பட வில்லை. இதனால் காங்கிரஸ்-தி.மு.க. இடையே மீண்டும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.

நாளை (திங்கட்கிழமை) வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இன்று (ஞாயிற்றுக்கிழமைக்குள்) தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் காங்கிரஸ்-தி.மு.க. தனித்தனியாக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பின்போது தொகுதி பங்கீடு தொடர்பாக சுமூக முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் புதுச்சேரி திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகனும் பங்கேற்றுள்ளார்.

முன்னதாக புதுச்சேரிக்கான திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் உடன் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியின்போது முதல்-அமைச்சரை ப.சிதம்பரம் சந்தித்தையடுத்து தொகுதி பங்கீடு இறுதியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com