பியூஷ் கோயலுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு


பியூஷ் கோயலுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
x

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

சென்னை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக நேற்று இணைந்தது. அதேவேளை, அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக (அன்புமணி ராமதாஸ் தரப்பு) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், மத்திய மந்திரியும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த சந்திப்பின்மூலம் அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக (அன்புமணி ராமதாஸ் தரப்பு) இடம்பெற்றிருப்பது உறுதியானது.

இந்த சந்திப்பின்போது நாளை மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அன்புமணி ராமதாசுக்கு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுக , பாஜக இடையேயான தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்கும் பாமகவுக்கு 18 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story