

சென்னை,
தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள தம்பிதுரை, ஜி.கே.வாசன், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகிய 6 பேரின் பதவிக்கா லம் வரும் ஏப்ரல் 2-ந்தேதியுடன் முடிகிறது. இந்த 6 எம்.பி.க்கள் காலியிடங்களை நிரப்ப தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் கடந்த பிப்ரவரி 26-ந் தேதி தொடங்கியது.
இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க. சார்பில் 4 எம்.பி.க்களையும், அ.தி.மு.க. சார்பில் 2 எம்.பி.க்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும். தி.மு.க. தங்களுடைய கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தே.மு.தி.க.வுக்கு தலா ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதேபோல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் போட்டியிடுகிறார். இவர் அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தே.மு.திக. சார்பில் பொருளாளர் சுதீஷ் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அதிமுக சார்பில் தம்பிதுரை போட்டியிடுகிறார். மற்றொரு இடம் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநிலங்களவை பதவிக்கு பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று காலை 10.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.