

விருதுநகர்,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நயினார் நாகேந்திரனை ஆதரித்து அண்ணாமலை இன்று பிரசாரம் மேற்கொண்டார். இது தொடர்பாக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழகத்தை பிடித்திருக்கும் தீயசக்தி திமுகவை விரட்டியடித்து, மக்கள் நலன் காக்கும் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் ஏற்படவேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு ஒன்றுபட்டுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் களம் காணும், பாஜக மாநில தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
தென்தமிழகத்தின் வளர்ச்சி மீது பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தனி கவனம் உண்டு. அப்படி தமிழக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் தென்மாவட்டங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு என்ன வளர்ச்சி திட்டங்களை கொடுத்தது? தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் திமுக ஆட்சி வேண்டாம். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை கொண்டுவர தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மக்கள் நல ஆட்சியால் மட்டுமே முடியும்.
தமிழகத்தில் அடிமை கட்சி என்றால் அது திமுக மட்டும் தான். திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை குறைத்துவிட்டு ஒன்றுக்கும் உதவாத காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை கொடுக்க காரணம் என்ன? யாருக்கு யார் அடிமையாக இருக்கிறார்கள் என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம். வளர்ச்சிக்கு எதிரான, மக்கள் நலனுக்கு எதிரான திமுக கூட்டணியை முற்றிலும் புறக்கணிக்கவேண்டிய நேரம் இது. வருகின்ற 23 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், தமிழக மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் திமுக கூட்டணிக்கு முடிவு கட்டப்போவது உறுதி.
சாத்தூர் பகுதியில் வறட்சி நிலவுவதற்கு திமுகவின் கையாலாகாத திட்டமிடலே காரணம். செண்பகவல்லி அணையை சீரமைப்போம் என போலி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பலமுறை கேரளா சென்றபோதும் அதுபற்றி பேசவில்லை. விவசாயத்தின் மீது அக்கறையில்லாத ஆட்சி இனியும் தொடர கூடாது.
அதற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை நமது தாய்மார்களும், பொதுமக்களும் மகத்தான ஆதரவு வழங்கி வரலாற்று வெற்றி பெற வைப்பார்கள் என்பது உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! தமிழகம் மீண்டும் தலைநிமிரட்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.