

சென்னை,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீடு குழு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியது. இதனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமாக காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியது.
இதனையடுத்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், டி.எஸ்.சிங் தியோ ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றனர். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினர்.
முதல்-அமைச்சருடனான சந்திப்பின்போது, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் தொகுதிகளின் விவரங்கள் அடங்கிய கடிதத்தை கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் அல்லது கனிமொழி எம்.பி டெல்லியில் காங்கிரஸ் அகில இந்திய தலைமையுடன் பேசுவார்கள் என்று தெரிகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு 27 சட்டமன்ற தொகுதிகளும், டெல்லி மாநிலங்களவை எம்.பி. பதவி ஒன்றும் தி.மு.க. தரப்பில் கொடுக்கலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில், ஆட்சியில் பங்கு குறித்து தமிழ்நாடு காங். பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக இருக்கிறது. அவர்கள் எங்கள் பலத்தை அங்கீகரித்துள்ளனர். காங்கிரஸ் எல்லாவற்றுக்கும் தயார். அரசியலில் நீங்கள் எல்லோருடனும் பேசத்தான் வேண்டும்.
அரசியலில் எதையும் கைவிட முடியாது. இந்த விருப்பம் அடிமட்டத்தில் இருந்து வந்துள்ளன. அவற்றை நமது கோரிக்கைகளாக முன்வைக்க வேண்டும். எந்தக் கட்சிதான் அதிகாரத்துக்கு ஆசைப்படாது?. அரசியல் கட்சி என்ற முறையில் அதிகாரம் வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
நாங்கள் கட்சி நடத்துகிறோம்; என்.ஜி.ஓ. அல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சியும் லட்சியங்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன. அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். கூடுதல் தொகுதிகளை கேட்பதுதான் காங்கிரஸ் இலக்கு.
தமிழக காங்கிரசுக்கு 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ஓட்டு வங்கி உள்ளது. ராகுல் காந்திக்கு தமிழகத்தில் அமோக செல்வாக்கு உள்ளது. நல்ல நாட்கள் காங்கிரசுக்கு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.