வேட்புமனு தாக்கல் செய்ய பாடை கட்டி வந்த சுயேட்சை வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

வருகிற 6-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
வேட்புமனு தாக்கல் செய்ய பாடை கட்டி வந்த சுயேட்சை வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
Published on

சென்னை,

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 23-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடக் கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 6-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகமான தாலுகா அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

பாளையங்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சங்கரநாராயணன் மாட்டுவண்டியில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

நெல்லை தொகுதியில் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த தளபதி முருகன், ரஜினி ரசிகர்களின் சார்பில் போட்டியிடுவதாக கூறி நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். விதிமுறைகளின்படி ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகையை 5 ரூபாய் நாணயங்களாக மூட்டையில் கட்டி கொண்டு வந்து செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதேபோன்று நெல்லை தொகுதியில் கருஞ்சிறுத்தை மக்கள் இயக்க நிறுவனர் அதிசய பாண்டியன் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அவர், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்று கூறி, இறந்தவர் உடலை பாடை கட்டி தூக்கி வருவது போன்று ஒருவருக்கு மாலை அணிவித்து சிலருடன் சேர்ந்து தூக்கி வந்தார். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அதிசய பாண்டியனுடன் 4 பேரை மட்டும் அனுமதித்தனர். அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், பாடை கட்டி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர் அதிசய பாண்டியன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அலட்சியமாக பொது இடங்களில் செயல்படுதல், பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com