

சென்னை,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஒவ்வொரு பிரதான கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
ஆளும் தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. தற்போது புதிதாக தே.மு.தி.க.வும் இணைந்து உள்ளது.
இந்தநிலையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று முன்தினம் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை தி.மு.க. தலைமைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டது.
மறுநாளே அதாவது நேற்று தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில், தி.மு.க. தரப்பில் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு. துணை பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
ஆகியோரும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன். தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், மாநில துணைத்தலைவர் எம்.அப்துல் ரகுமான் ஆகியோர் பங்கேற்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த முறை 3 தொகுதிகள் கூட்டணியில் ஒதுக்கப்பட்டன. இந்த முறை 5 தொகுதிகளை கேட்டு, குறைந்தபட்சம் 4 தொகுதிகளையா வது ஒதுக்க வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற நிலையில், வெளியே வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், 'கருணாநிதி எங்களுக்கு 5 தொகுதிகளை கொடுத்து பெருமைப்படுத்தினார். இப்போதும் 5 தொகுதிகளை கேட்டிருக்கிறோம். குறைந்தபட்சம் 4 தொகுதிகள் கொடுத்தால் நன்றாக இருக்கும் என சொல்லியுள்ளோம் என்றார்.
இந்தநிலையில், 2-வது நாளாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து பேச இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி கடந்த தேர்தலில் மணப்பாறை மற்றும் பாபநாசம் என்ற 2 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த பின்பு செய்தியாளர்களை ஜவாஹிருல்லா சந்தித்தார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில் எத்தனை தொகுதிகள் கேட்டுள்ளீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, இம்முறை மனித நேய மக்கள் கட்சி 5 தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாகவும் எங்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அதனை திமுக தலைமையிடம் எடுத்துச் செல்வதாகவும் திமுக பேச்சுவார்த்தை குழு கூறியுள்ளது என்றார்.
மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலை போலவே இம்முறையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்து எந்த விதமான முடிவும் எட்டப்படாத நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக திமுக பேச்சுவார்த்தைக் குழு கூறியுள்ளது என்றார்.