புதுச்சேரியில் 2 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டி: இன்று வேட்புமனு தாக்கல்

புதுச்சேரி தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்யாதவர்கள் இன்று மனுதாக்கல் செய்கிறார்கள்.
புதுச்சேரியில் 2 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டி: இன்று வேட்புமனு தாக்கல்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரு கிற ஏப்ரல் மாதம் 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கலுக்கு இன்று (திங்கட்கிழமை) கடைசிநாள் ஆகும்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ்-16, பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு-14 தொகுதிகள் என தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவும் தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுதாக்கல் செய்யாதவர்கள் இன்று மனுதாக்கல் செய்கிறார்கள்.

இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சியினர் தேர்தல் பணியை மும்முரமாக செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளான தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை புதுச்சேரி மாநில தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையிலும், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தலைமையிலும் பல்வேறு கட்டமாக நடந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு ஏற்படவில்லை.

கூட்டணியில் காங்கிரஸ் 17 இடங்களை கேட்டது. ஆனால் தி.மு.க. காங்கிரஸ் சரிசமமாக (14 -14, கூட்டணி கட்சிகளுக்கு 2) என தொகுதி களை பிரித்துக்கொள்ள தி.மு.க.வினர் தெரிவித்தனர். இதற்கு காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்ற போட்டியும் தி.மு.க. - காங்கிரஸ் இடையே நீடித்தது.

நீண்ட இழுபறிக்கு பின் நேற்று இரவு உடன்பாடு ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு- 16, தி.மு.க.வுக்கு -12, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 1 இடம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் 2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய இந்திய கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதியில் சலீம் என்பவரும், உழவர்கரை தொகுதியில் நாராகலைநாதன் என்பவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 2 இடங்களில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பது புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com