இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு செல்லும் சிடிஆர்.நிர்மல்குமார்!

இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு செல்லும் சிடிஆர்.நிர்மல்குமார்!
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

முன்னதாக, தவெக தலைவர் விஜய், நேற்று மாலை கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.

இதனிடையில் திமுக கூட்டணியில் உள்ள விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் ஆதரவினை தமிழக வெற்றி கழகம் கோரியது. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கடிதம் மற்றும் தொலைப்பேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியது. இது சம்பந்தமாக அந்த கட்சிகள் இன்னும் எந்த முடிவினையும் எடுக்காமல் இருக்கிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய செயற்குழு கூட்டம் நாளை (08-05-26) நடைபெறவுள்ளது. இதில் தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைப்பாடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தவெக ஆட்சியமைக்க ஆதரவு கோரி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு த.வெ.க இணைப்பொதுச்செயலாளர் சிடிஆர். நிர்மல்குமார் அக்கட்சியின் மாநில செயலாளர்களை சந்திக்க சென்றார்.

அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகள் உள்பட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து தவெக ஆதரவு குறித்து ஆலோசனை நடத்தினார்.

நாளை கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com