

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதையொட்டி கட்சிகளிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் வி.சி.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. த.வெ.க.வுடனும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. அதாவது காங்கிரஸ் தரப்பில் ஒரு பிரிவினர் த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வலியுறுத்துவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. முன்னதாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகையும் தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசியதில், இந்த முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் கடந்த சில நாட்களாக தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் நிலவிய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தி மு க - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை முடிந்து தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
இரு கட்சிகளின் தலைவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது