விவசாயம் பற்றி பாடம் எடுக்க மோடிக்கு வெட்கமாக இல்லையா? - அமைச்சர் ரகுபதி காட்டம்

பிரதமர் மோடியின் பொய் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
விவசாயம் பற்றி பாடம் எடுக்க மோடிக்கு வெட்கமாக இல்லையா? - அமைச்சர் ரகுபதி காட்டம்
Published on

சென்னை,

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்குத் தமிழ்நாடு மீது பாசம் டன் கணக்கில் கொட்டும். திருச்சி கூட்டத்தில் ஆத்தோ ஆத்து என்று உரையை ஆற்றியிருக்கிறார். வறண்ட தானியமான கேப்பையில் நெய் வடிவது சாத்தியமில்லை. கேட்கிறவன் கேனையனா இருந்தால் கேப்பையில் நெய் வடியுதுனு சொல்ற மாதிரி பொய்ப் பிரசாரங்களை முன்னெடுப்பதில் பிரதமர் மோடியை மிஞ்சும் ஆள் இந்த உலகத்திலேயே இல்லை. விவசாயம், விவசாயிகளின் வருமானம், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியெல்லாம் பேசுவதற்குப் பிரதமர் மோடிக்கு அருகதை இருக்கிறதா?.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் முந்தைய அதிமுக ஆட்சியில் நசிந்து கிடந்த விவசாயத்தை மீட்டெடுக்க வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி கடந்த ஐந்தாண்டுகளாக வேளாண் துறைக்கென ரூபாய் 1 இலட்சத்து 94 ஆயிரத்து 76 கோடி நிதி, உழவர்களின் நலனுக்காகவும், உழவுத் தொழிலை மேம்படுத்தவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உழவர்களின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 /- ஆக உயர்த்தப்படும் என வாக்குறுதி கொடுத்து, அதன் படி விலையை உயர்த்தி வழங்கியவர் முதல்-அமைச்சர். ஆனால், பிரதமர் மோடி என்ன செய்தார்.? விவசாயத்தையே அழிக்கும் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் பார்த்தார். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாய விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் எனப் போராடிய விவசாயிகள் மீது கண்மூடித்தனமான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார்.

“விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்” என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, மோசமான 3 விவசாயச் சட்டங்களைக் கொண்டு வந்து, தனக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டார் பிரதமர் மோடி. சந்தைகளை நீக்கிவிட்டு விவசாய வணிகத்தை கார்ப்பரேட் மூலம் செய்ய மோடி கொண்டு வந்த விவசாயச் சட்டங்கள் வழிவகுத்தன. அந்தக் கருப்புச் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார்.

இந்திய வரலாற்றிலேயே நடந்த மிக நீண்ட மக்கள் போராட்டம் என்று வருணிக்கப்படும் போராட்டத்தைத் தலைநகர் டெல்லியின் எல்லைகளில் ஓராண்டுக்கும் மேலாக முகாமிட்டு விவசாயிகள் நடத்தினார்கள். மழை, வெப்பம், கடும் பனி, போலீஸ் கட்டுப்பாடுகள், தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு என எத்தனை அக்கிரமங்களைச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்த மோடிதான் திருச்சியில் கபட வேடம் போடுகிறார்.

வேளாண்மை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கடுங்குளிர், தற்கொலை, விபத்தால் 700 விவசாயிகளை கொன்றுவிட்டு, விவசாயம் பற்றியெல்லாம் பாடம் எடுக்க மோடிக்கு வெட்கமாக இல்லை?. உத்தரபிரதேசம் லக்கிம்பூரில் ஊர்வலம் சென்ற விவசாயிகள் மீது பா.ஜ.க.வின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் காரை ஏற்றி 4 அப்பாவிகளைப் படுகொலை செய்தவர்கள் காருண்ணியம் பேசுகிறார்கள்!

பிரதமர் மோடி இப்படியென்றால் அவருடைய பரம அடிமையான பழனிசாமியும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததோடு சேலம் - சென்னை பசுமை வழிச் சாலையை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுக்காலத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தத் தரவுகளை மறைத்து மோசடி ஆட்சியை நடத்தி வருகிறார்கள். அதே பாணியைத்தான் எடப்பாடி பழனிசாமியும் தன்னுடைய ஆட்சியில் செய்தார். சொந்த காரணங்களுக்காகத்தான் விவசாயிகள் இறந்தனர் என்று அன்றைக்கு பொய்க் கணக்கு சொன்னார்.

மதுரையில் விவசாயத்தை அழிக்கும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முயற்சிக்குக் காரணமான கனிமவளச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மாநிலங்களவையில் கொண்டு வந்தபோது ஆதரவு கொடுத்து, மதுரை விவசாயிகளுக்குத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தி விவசாயத்தைக் காப்பாற்றியவர் நம்முடைய முதல்-அமைச்சர்.

திருச்சியில் நின்று விவசாயிகளுக்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடிதான், சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க விவசாயப் பொருட்களை இந்தியச் சந்தைகளில் விற்க ஒப்புதல் அளித்து, இந்திய விவசாயத்தையே சவக்குழியில் தள்ளியுள்ளார். அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கான வரியை 18 சதவீதமாகக் குறைத்து, இந்திய விவசாயத்தைச் சவக்குழியில் தள்ளியுள்ளார் பிரதமர் மோடி. 45.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க யானையை, உள்ளூர் கரும்புத் தோட்டத்திற்குள் நுழையவிட்டுப் பொருளாதாரத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்.

கேஸ் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் அவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குத்தான் வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார். இந்திய மக்கள் கேஸ் சிலிண்டருக்கும் பெட்ரோலுக்கும் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று 2014-ல் கொடுத்த வாக்குறுதியைப் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி விட்டாரா? ’விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவேன்’ எனக் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த பின் விவசாயிகள் வயிற்றில் அடித்து வருபவர்தானே பிரதமர் மோடி. இவையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாது எனக் கதையளக்க வந்துவிட்டார்!

திராவிட மாடல் ஆட்சியில் விவசாயத்திற்கு எனத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, 5 ஆண்டுகளில் ரூ. 1,94,076 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் விலையைக் குவிண்டாலுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தியுள்ளோம். ஆனால் பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப்பார்த்தார். திராவிடமாடல் ஆட்சியில் 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கக் கூடாது என உதய் மின் திட்டம் வழியாகத் தடை போட்டவரும் இதே பிரதமர் மோடிதான் என்பதை விவசாயிகள் மறக்கமாட்டார்கள்.

ஐந்தாண்டு திமுக ஆட்சியில் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, பூமி செழித்தது. உற்பத்தி அதிகரித்தது. கடந்த காலங்களை விட 3 லட்சம் ஏக்கர் கூடுதலாக நெல் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 22.7 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது திராவிட மாடல் ஆட்சியில் ஆண்டுக்கு 42.6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுக்க தார்ப்பாய் வசதியுடன் 103 திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. மேலும் ரூ.400 கோடி மதிப்பீட்டில் 300 சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர 100-க்கும் மேற்பட்ட நவீனச் சேமிப்புக் கிடங்குகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எடப்பாடியின் ஆட்சிக் காலத்தில் 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி, திராவிட மாடல் ஆட்சியில் 5.66 சதவீதத்தைத் தாண்டி இருக்கிறது.

இப்படி விவசாயிகளின் நண்பனாக இருந்து விவசாயத்தைப் பாதுகாத்து வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் மழைக்காலத்தில் கூட நெல் கொள்முதல் ஈரப்பத அளவை குறைக்காமலும், மழை வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதும் முறையான நிவாரண நிதி கூட வழங்காமலும் விவசாயிகளின் எதிரியாக இருப்பவர் பிரதமர் மோடி. விவசாயிகளின் எதிரி மோடியையும் அவருக்குத் துணை போகும் துரோகி எடப்பாடி பழனிசாமியையும் தமிழ்நாட்டு விவசாயக் குடும்பங்கள் என்றும் மன்னிக்காது.

பிரதமர் மோடியின் பொய் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது. டெல்லி டப்பா எஞ்சினால் ஒருநாளும் தமிழ்நாட்டில் நுழைய முடியாது. இங்கே திராவிட மாடல் ஆட்சியின் சூப்பர் ஃபாஸ்ட் இஞ்சின் இருக்கிறது. இந்த ஒற்றை இஞ்சின் மூலம் தமிழ்நாட்டை வளமாக்கியிருக்கிறோம். எங்களிடம் இரட்டை இஞ்சின் கிடைக்கும் போது இந்தியாவையே வளமாக்கி உலக நாடுகளுக்கு சவால் விடும் வல்லமையை திராவிட மாடல் அரசு எதிர்காலத்தில் செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com