

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் கடும் இழுபறி நீடித்து வருகிறது. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த கருத்துகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். இதற்கிடையே, திமுக - அதிமுக கூட்டணி என்று பேச்சு எழுந்துள்ள சூழலில் அதற்கும் கடும் எதிர்வினைகள் கிளம்பியுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் முடிந்து ஒரு வாரமாகியும் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததை கண்டித்து இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை நடத்தி வரும் நடிகர் மன்சூர் அலிகான், கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மக்கள் தீர்ப்பை பெற்றுள்ள விஜய்யை உடனடியாக அழைத்து முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். ஆளுநர்கள் காலதாமதம் செய்வதை தவிர்க்க, இனி வரும் காலங்களில் நீதிபதிகள் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்யும் முறையை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.