தமிழ்நாடு காங்கிரசில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு: கிரிஷ் சோடங்கர்

சில நேரங்களில் கூட்டணி கட்சிகளுக்காக ஒரு சில மாற்றங்கள் செய்யப்படுவது உண்டு என்று கிரிஷ் சோடங்கர் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரசில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு: கிரிஷ் சோடங்கர்
Published on

சென்னை,

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய பா.ஜனதா அரசு அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற தேசிய முக மைகள் மூலம் அழுத்தம் கொடுத்து அனைத்தையும் சாதித்து வருகிறது. தேசிய முகமைகள் பா.ஜனதாவின் தேர்தல் பிரசார குழுவின் ஒரு அங்கமாகவே செயல்படுகின்றன. எனினும், தமிழ்நாட்டில் பா.ஜனதா - அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்து வருவதால் அந்த கூட்டணி விரக்தியில் உள்ளது.

அவர்கள் 3-வது இடம் அல்ல, அதற்கு கீழும் செல்வார்கள். அவர்கள் அணியை சேர்ந்தவர்கள் பலர் மாற்று அணிக்கு சென்றுள்ளனர். எனவே, அவர்கள் அணியை சேர்ந்தவர்களையும், ஓட்டுகளையும் தக்க வைப்பதே அவர்களுக்கு விரக்தியை அளித்துள்ளது. மேலும், அவர்கள் தி.மு.க. அரசின் மக்கள் நலப் பணிகளையும் பார்க்கிறார்கள். அவர்கள் முயன்று பார்த்தாலும் அவர்களுக்கு எதிர்பார்த்த முடிவு வருவதில்லை. எனவே, அவர்களால் வேறு எதுவும் பேசமுடியாத நிலையில் உள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுகுழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான தேர்வு முடிந்துவிட்டது. இந்த முறை புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஏற்கனவே அரசியல் குடும்ப பின்னணி இல்லாமல் நீண்டநாட்களாக எங்கள் கட்சியில் உழைக்கும் சாதாரண காங்கிரஸ்காரர்களுக்கு இந்த முறை அதிகளவில் இடங்கள் வழங்கப்படும்.

புதுச்சேரியை பொறுத்தவரையில் 30 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமைக்குழு ஏற்கனவே தேர்வு செய்துள்ளது. நாங்கள் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்து இருக்கிறோம். அவர்கள் வரும்போது பேசி எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். வழக்கமாக புதுச்சேரியில் காங்கிரஸ் 21 இடங்களிலும், தி.மு.க. 9 இடங்களிலும் போட்டியிடுவது வழக்கம். சில நேரங்களில் கூட்டணி கட்சிகளுக்காக இதில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படுவது உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com