

சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 சட்டசபை தேர்தல்களில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி நீடித்து வருகிறது. 2006 தேர்தலில் 50 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்றது.
2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல், 2016 தேர்தலிலும் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. கடந்த (2021) சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கிய நாள் முதலே தி.மு.க. - காங்கிரஸ் இடையே இழுபறி நிலை நீடித்தது.
அதாவது, காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு, 41 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீதம் இடம் என அடுக்கடுக்கான கோரிக்கைகளை முன்வைத்ததால், கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. அதிருப்தி அடைந்தது.
கடும் போராட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் வழங்க தி.மு.க. முன்வந்தது. வேறு வழியில்லாமல், காங்கிரஸ் கட்சியும் அதை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இதுவெல்லாம், கடந்த வாரங்களில் நடைபெற்ற பரபரப்பு அரசியல் நகர்வுகள் ஆகும். தற்போது, தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதிகளை தேர்வு செய்வதிலும் மோதல் போக்கு நீடிப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது, தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ள 18 தொகுதிகளை மீண்டும் கேட்பதுடன், ஏனைய 10 தொகுதிகளுக்கு 42 பெயர்கள் அடங்கிய தொகுதி பட்டியலை காங்கிரஸ் கட்சி தி.மு.க. தலைமையிடம் வழங்கியுள்ளதாம். அதில், பெரும்பாலானவை தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாம். அதனால், தி.மு.க. அதை ஒதுக்க முடியாது என்று கூறிவருகிறதாம்.
இப்படி, ஆரம்பம் முதலே தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருவதால், அது தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் பின்னடைவை சந்திக்க செய்துள்ளது.