

சென்னை,
கடந்த (2021) சட்டசபை தேர்தலில் இதே தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த ம.தி.மு.க., 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தாலும், இந்த முறை 4 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிலும், 3 இடங்களில் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியனிலும், ஒரு இடத்தில் தனி சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த தேர்தலைவிட இந்த முறை ம.தி.மு.க.வுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோதும், அதை ஏற்றுக்கொள்ள ஒரு காரணமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, ம.தி.மு.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவையும் தி.மு.க. ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
எம்.பி. வாய்ப்பு கைநழுவியது:
இதுவரை 3 முறை மாநிலங்களவைக்கும், 2 முறை மக்களவைக்கும் எம்.பி.யாக சென்றுள்ள வைகோ, 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு, அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த நிலையில், தற்போது தி.மு.க. கூட்டணியில் மாநிலங்களவை சீட் கிடைக்கும் என்று வைகோ எதிர்பார்த்தார். ஆனால், அது தே.மு.தி.க. வசம் சென்றுவிட்டதால், அந்த வாய்ப்பு கைநழுவி போனது.
கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு:
அதனால், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இந்த முறை சட்டசபை தேர்தலில் களம் இறங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவர் சட்டசபை தேர்தலில் கோதாவில் குதிக்க இருக்கிறார். இந்த முறை வைகோ, கோவில்பெட்டி தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள். அதுவும் தனிச் சின்னத்தில் அவர் களம் காண்பார் என்று தெரிகிறது.
சட்டசபையில் ஓங்கி ஒலிக்குமா?
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒலித்த வைகோவின் குரல், இதுவரை தமிழக சட்டசபையில் ஒலித்தது இல்லை. அரை நூற்றாண்டுக்கு மேலான அவரது அரசியல் பயணத்தில், இந்த முறை வெற்றி பெற்றால், அவரது குரல் சட்டசபையில் ஓங்கி ஒலிக்கும்.