

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்கள், நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் சிறப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன்மூலம் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சி நடப்பதாக கூறியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதாவது:
"தோல்வியின் பயம் தெளிவாக தெரிகிறது; அதனால்தான் இந்த அரசு தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத் திணிக்க முயல்கிறது; தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து, நமது கூட்டாட்சி கட்டமைப்பை ஆபத்துக்குள்ளாக்கும் இந்த முயற்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது; இதை நாங்கள் நடக்க விடமாட்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.