சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி..? - நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை

பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி..? -  நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நாளை பா.ம.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் ராமதாஸ் வீடு அமைந்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் நாளை (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

பா.ம.க., வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் 26-ந்தேதி (நாளை) காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்து கலந்தாலோசிக்கப்பட உள்ளது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அன்புமணி தலைமையிலான பா.ம.க. தரப்பு அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது. அதேவேளை, ராமதாஸ் தலைமையிலான பாமக தரப்பு தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் நாளை நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com