

கோவை,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை குறைக்க தி.மு.க. எங்களை நிர்பந்தப்படுத்தவில்லை. நிர்பந்தப்படுத்த தி.மு.க. ஒன்றும் பா.ஜனதா அல்ல. அடிபணிய நாங்கள் ஒன்றும் அ.தி.மு.க. இல்லை.
தி.மு.க. தலைமையில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கிறது. ஏன் என்றால் இது கொள்கைக்கான கூட்டணி. அதனால் சீட்டு எங்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. இன்று எது அபாயம், எது தீங்கானது? என்று பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். தான் தீங்கானது. அந்த தீங்கிற்கு தமிழ்நாட்டில் இருக்கிற சிலர் துணை போய் விட்டார்கள்.
அவர்கள் கால் பதிப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கே ஆபத்தானது. அதை தடுக்கவே நாங்கள் தி.மு.க.வுடன் உடன்பாட்டில் இருக்கிறோம். சீட்டு குறைவதோ, கூடுவதோ எங்களுக்கு ஒரு விஷயம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.