போளூர், சேத்துப்பட்டில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.3¼ லட்சம் பறிமுதல்

போளூர், சேத்துப்பட்டில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.3¼ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Published on

போளூர்,

போளூர் தனி தாசில்தார் சுரேஷ் தலைமையிலான பறக்கும் படையினர் போளூர் அத்திமூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜமுனாமரத்தூர் நோக்கி சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் செய்யாறு தாலுகா வால்குடை கிராமத்தை சேர்ந்த புளி வியாபாரியான மகேந்திரன் என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.1 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆரணியை சேர்ந்த ஜெயமணி மகன் முத்து. இவர், ஆழ்துளை கிணறு போடும் ஒருவரிடம் வேலை செய்து வருகிறார். சந்தவாசல் நாராயணபுரத்தில் ஆழ்துளை கிணறு அமைத்ததற்காக 54 ஆயிரத்து 500 ரூபாயை தனது முதலாளியிடம் கொடுப்பதற்காக வேனில் கொண்டு சென்றார். அப்போது சந்தவாசலில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட வேளாண்மை உதவி இயக்குனர் குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

சேத்துப்பட்டு 3வழிச்சாலையில் வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், ஏட்டு குப்பன் ஆகியோர் கொண்ட தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது விழுப்புரம் மாவட்டம் வளத்தி கிராமத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியரான ரவிசங்கர் பெட்ரோல் பங்க்கில் வசூலான ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு வந்தார்.

தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் அவரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com