புதுச்சேரி நிலையான வளர்ச்சியை எதிர்வரும் காலங்களில் எட்டும்; கவர்னர் கிரண்பெடி நம்பிக்கை

புதுச்சேரி நிலையான வளர்ச்சியை எதிர்வரும் காலங்களில் எட்டும் என்று கவர்னர் கிரண்பெடி நம்பிக்கை தெரிவித்து பேசியுள்ளார்.
புதுச்சேரி நிலையான வளர்ச்சியை எதிர்வரும் காலங்களில் எட்டும்; கவர்னர் கிரண்பெடி நம்பிக்கை
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் ஆகியவை கடந்த 20ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் கவர்னர் கிரண்பெடி உரையை தொடர்ந்து முதல் அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் உரையை படிக்க அவகாசம் கேட்டு வேறு தேதியில் சட்டசபையை நடத்துமாறு கிரண்பெடி கடிதம் அனுப்பினார். இதற்கு பதில் அளித்து முதல் அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதினார்.

இதனால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி உரையாற்ற சட்டசபைக்கு வராமல் புறக்கணித்தார். எனினும், திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மற்றும் துறைவாரியான மானிய கோரிக்கைகளை சட்டசபையில் முன்னிலைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று மாலை கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி, புதுச்சேரி சட்டசபையில் இன்று உரையாற்றிய கவர்னர் கிரண்பெடி, மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் நல்லாட்சிக்கான குறியீடு தெடர்பாக மத்திய அரசு பாராட்டி உள்ளதை சுட்டிக்காட்டி, முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்களை பாராட்டுவதாக தெரிவித்தார்.

கொரோனா எதிர்ப்பு போரில் புதுச்சேரி தேசிய அளவில் முன்மாதிரியாக செயல்பட்டு உள்ளதாகவும், 2019-20 நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்த நிதியில் 93 சதவீதம் அளவுக்கு அரசு செலவு செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் தனி நபர் வருமானம் இந்தாண்டு 5.3 சதவீதம் உயர்ந்து உள்ளதாக தெரிவித்த கிரண்பெடி, புதுச்சேரி பொறியியல் கல்லூரி, தொழில் நுட்ப பல்கலைக்கழகமாக விரைவில் செயல்படும் என அறிவித்தார்.

அரசின் அனைத்து நிதி ஆதாரங்களையும் பயன்படுத்தி வறுமையை நீக்குவதில், அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக கிரண்பெடி பாராட்டு தெரிவித்தார். இதேபோன்று, நிலையான வளர்ச்சியை எதிர்வரும் காலங்களில் எட்டும் என உறுதியாக நம்புவதாக கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com