

பூந்தமல்லி,
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்றது. அப்போது பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னப்பாளையம் ஊராட்சி மேட்டுப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 195-ல் மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 858 வாக்குகள் பதிவாகி இருந்தது.
ஆனால் அதன்பிறகு அ.தி.மு.க.வினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து எம்.எல்.ஏ. வேட்பாளருக்கு 37 வாக்குகளும், எம்.பி. வேட்பாளருக்கு 27 வாக்குகளும் கூடுதலாக போட்டுவிட்டதாக கூறி தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளில் முறைகேடு நடந்து இருப்பதால் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அந்த ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் நேற்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி நேற்று மேட்டுப்பாளையத்தில் உள்ள 195-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 1,049 வாக்குகள் உள்ளன. அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலை 7 மணி முதலே பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தனர்.
ஆனால் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 15 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பிறகு முதியோர்கள், இளம்பெண்கள், கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் என ஆர்வமாக வாக்களித்தனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுக்கு நேற்று மாலை வளைகாப்பு நடைபெற்றது. முன்னதாக அவர், வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்துவிட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
வாக்குச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.
ஏற்கனவே இந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தவர்களுக்கு இடது கை ஆள் காட்டி விரலில் மை வைக்கப்பட்டு இருந்ததால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மறுவாக்கு அளித்த வாக்காளர்களுக்கு இடது கை நடு விரலில் மை வைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், வாக்குச்சாவடிக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது அவர், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட தவறில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
வாக்குப்பதிவு முடிய சில மணிநேரங்கள் இருந்தபோது அ.ம.மு.க.வினர் சிலர் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குச்சாவடி மையத்தின் அருகே கூட்டம் கூடியதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர்.
ஆனால் யாரும் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்றதால், போலீசார் அங்கிருந்தவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்காக கண்ணீர் புகை குண்டுகளையும் தயார்நிலையில் வைத்து இருந்தனர். இதனால் வாக்குச்சாவடி மையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 868 வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆண்கள் 406 பேரும், பெண்கள் 462 பேரும் வாக்களித்து உள்ளனர். மொத்தம் 82.7 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
கடந்த மாதம் நடந்த வாக்குப்பதிவின்போது 858 வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால் நேற்று நடந்த மறுவாக்குப்பதிவில் கூடுதலாக 10 வாக்குகள் பதிவாகி, 868 வாக்குகள் பதிவாகி இருந்தது.