தஞ்சை மாநகராட்சிக்கு குடிநீர், சொத்துவரி ரூ.12 கோடி பாக்கி செலுத்துமாறு 10 ஆயிரம் வீடுகளுக்கு தபால் மூலம் நோட்டீசு

தஞ்சை மாநகராட்சிக்கு குடிநீர், சொத்துவரி ரூ.12 கோடி பாக்கி உள்ளது. இதனை செலுத்துமாறு 10 ஆயிரம் வீடுகளுக்கு தபால் மூலம் நோட்டீசு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில், அரண்மனை, அருங்காட்சியகம் உள்ளிட்டவை உள்ளன. தஞ்சை நகராட்சி கடந்த 2014-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு மாநகராட்சிகளை அறிவித்து பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கியது. அதில் தஞ்சை மாநகராட்சியும் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி ரூ.904 கோடி மதிப்பீட்டில் 12 விதமான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வரி இனங்கள்

தஞ்சை மாநகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ளவர்கள் தங்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களுக்கு சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு பயன்பாட்டு கட்டணம், தொழிலுக்கான தொழில்வரி போன்ற வரி இனங்களை செலுத்தி வருகிறார்கள். இந்த வரி இனங்கள் தஞ்சை மாநகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலைவசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி, பொது சுகாதார வசதி போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சொத்துவரி, காலிமனை வரி, தொழில் வரியானது ஒவ்வொரு அரையாண்டுக்கும், குடிநீர் கட்டணம் ஒவ்வொரு காலாண்டுக்கும், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்பட வேண்டும். அதன்படி மக்கள் வரி இனங்களை செலுத்தி வருகிறார்கள்.

ரூ.12 கோடி பாக்கி

இந்த வரி இனங்களை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அலுவலக வரிவசூல் மையம், முனிசிபல் காலனியில் உள்ள வரி வசூல் மையம், கல்லுக்குளம் வரி வசூல் மையம் ஆகிய இடங்களில் செலுத்தலாம். இது தவிர ஆன்லைன் (tnurbanepay.tn.gov.in) மூலமும் செலுத்தலாம்.

இருப்பினும் தஞ்சை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் செலுத்தப்படாமல் பாக்கி உள்ளது. அதாவது சொத்து வரியாக ரூ.4 கோடியும், குடிநீர் வரியாக ரூ.6 கோடியும், இதர வரி இனங்கள் ரூ.2 கோடியும் என ரூ.12 கோடி பாக்கி உள்ளது. இந்த வரியை வருகிற 15-ந்தேதிக்குள் செலுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக அறிவிப்புகளும் செய்யப்பட்டு வருகின்றன.

10 ஆயிரம் வீடுகளுக்கு நோட்டீசு

இந்த வரி இனங்களை செலுத்தக்கோரி 10 ஆயிரம் வீடுகளுக்கு தபால்துறை மூலம் நோட்டீசு அனுப்பப்படுகிறது. அதில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை உடனடியாக செலுத்துமாறும், ஏதாவது குறை இருப்பின் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீசு 35-வது வார்டில் இருந்து 51 வார்டு வரை அனுப்பப்பட உள்ளது. இந்த நோட்டீசுகளை மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் நேற்று தபால்துறை உதவி கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மக்கள் தொடர்பு அதிகாரி யாதவ் ஆகியோரிடம் வழங்கினார். அப்போது மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், அலுவலக மேலாளர் கிளமெண்ட், வருவாய் உதவியாளர்கள் நெடுமாறன், ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அறிவிப்பு பலகையில் பெயர்

மேலும் வரியை செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்துமாறும், 15-ந்தேதிக்குள் (ஞாயிற்றுக்கிழமை) செலுத்தாவிட்டால் அவர்கள் பெயர் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com