போலி இ-பாஸ் தயாரித்து பெங்களூருவில் இருந்து ஊட்டி வந்த பெண் உள்பட 5 பேர் கைது

போலி இ-பாஸ் தயாரித்து பெங்களூருவில் இருந்து ஊட்டி வந்த பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Published on

ஊட்டி,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கக்கநல்லா சோதனைச்சாவடி வழியாக வாடகை காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று முன்தினம் இரவு பெண் உள்பட 5 பேர் வந்தனர். பின்னர் ரோகிணி சந்திப்பு பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விடுதியில் தங்கினர். அவர்கள் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்ததால், சந்தேகமடைந்த பொதுமக்கள் உடனடியாக வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் ஊட்டி தாசில்தார் குப்புராஜ் மற்றும் அதிகாரிகள் விடுதிக்கு சென்று, விசாரணை நடத்தினர். அப்போது பெங்களூருவில் இருந்து ஊட்டிக்கு போலி இ-பாஸ் தயாரித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஊட்டி நகர மேற்கு போலீசாரிடம், அவர்கள் 5 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ராம்பிரசாத்(வயது 37), பெங்களுருவை சேர்ந்த ரமேஷ் சர்மா(42), அவரது மனைவி மனிஷா சர்மா(28), இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஈஸ்வர் சர்மா(50), பெங்களூருவை சேர்ந்த சந்தோஷ் சர்மா (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் ஊரடங்கால் வேலையில்லாமல் இருந்த அவர்களை சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் கணேஷ் என்பவர் சமையல் மற்றும் உதவியாளர் வேலைக்காக ஊட்டிக்கு வரும்படி அழைத்ததும், அதற்கு போலி இ-பாஸ் தயாரித்து ரூ.16 ஆயிரம் வாடகை செலுத்தி காரில் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அருண் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒப்பந்ததாரர் கணேஷ், கார் டிரைவர் ஜெகதீஷ் ஆகிய 2 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com