கொரோனா பரவலை தடுக்க அதிநவீன எந்திரங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

கொரோனா தொற்று பரவலை தடுக்க வாகனங்களில் பொருத்தப்பட்ட அதிநவீன எந்திரங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களும் அதிகரித்து உள்ளது. கிராமப்புறங்கள் உள்பட தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் முழுமையாக கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊட்டி நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் 2 வாகனங்களில் பொருத் தப்பட்ட அதிநவீன எந்திரங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அதிநவீன எந்திரத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் வாகனம் நீலகிரி மாவட்டத்திற்கு ஊட்டி நகராட்சி சார்பில் ரூ.3.54 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரத்தின் மூலம் அதிகளவில் கிருமி நாசினிகளை காற்றில் கலந்து விட முடியும். எந்திரம் சுமார் 10 முதல் 20 மீட்டர் தூரம் வரை கிருமிநாசினியை சுழற்றி அடிக்கும் திறன் உள்ளது. எந்திரம் பொருத்துவதற்காக ஊட்டி நகராட்சியின் வாகனம் ஒன்று அதற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு, அந்த வாகனத்தில் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் மற்றும் ஜெனரேட்டர் பொருத்தி இயந்திரம் இயங்குகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் செல்லாமல் தூரத்தில் இருந்தவாறே முழுமையாக கிருமிநாசினி தெளிக்க முடியும். நோய் தொற்று அதிகமாக பரவல் என கண்டறியப்பட்ட கிளஸ்டர் பகுதிகளில் உள்ளே செல்லாமல் அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யலாம். சுகாதாரத்துறை சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பில் அதிநவீன எந்திரத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த எந்திரத்தின் மூலம் அதிக அளவில் கிருமி நாசினிகளை காற்றில் கலந்து விடும் வகையில் மாற்றலாம். இதன் மூலம் 5 முதல் 10 மீட்டர் வரை கிருமிநாசினி தானியங்கி மூலம் தெளிக்க உதவுகிறது.

அந்த எந்திரத்தில் 600 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த வாகனம் ஊரக பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும். மாவட்ட நிர்வாகம் வரையறுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அரசு மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, ஊட்டி நகராட்சி கமிஷனர் சரஸ்வதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com