பக்கிங்காம் அரண்மனையில் விருந்து: சைதை துரைசாமிக்கு, இங்கிலாந்து இளவரசர் அழைப்பு நாளை லண்டன் பயணம்

இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடக்கும் விருந்து நிகழ்ச்சியில், சைதை துரைசாமியை பங்கேற்குமாறு அந்நாட்டு இளவரசர் அழைப்பு விடுத்துள்ளார்.
Published on

சென்னை,

சென்னையில் மனிதநேய மையம் என்ற பெயரில் சமூக சேவை அமைப்பை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார், பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி.

இந்த மனிதநேய மையம் அமைப்பு மூலம் ஏழை-எளியோர், பெண்கள் மற்றும் நலிந்தவர்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கி வருகிறார். தான் கட்டிய திருமண மண்டபத்தையும் ஏழை-எளியோருக்காகவே பயன்படுத்தி வருகிறார். மின்சார வசதி உள்பட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்த மண்டபத்தை ஏழை மக்கள் இலவசமாக பயன்படுத்த முடியும்.

இங்கிலாந்து இளவரசர் அழைப்பு

மனிதநேய மையம் மூலம் பல்வேறு மத்திய-மாநில அரசு பணிகளுக்காக இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறார். இதன்விளைவாக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். என உயரிய பதவிகளில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு மத்திய-மாநில அரசு பணிகளிலும் இவரது மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதுதவிர இறந்தவர்களின் உடல்களை வைக்கும் 30 குளிர்சாதன பெட்டிகளை (பிரீசர் பாக்ஸ்) அவர் இலவசமாக வழங்கி உள்ளார்.

இவ்வாறு சிறந்த முறையில் மக்கள் சேவையாற்றி வருகிறார் என்ற வகையில் இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு சைதை துரைசாமிக்கு இங்கிலாந்து இளவரசரும், பிரிட்டிஷ்-ஆசியா அறக்கட்டளை நிறுவனத்தின் அரச குடும்ப புரவலருமான சார்லஸ் அழைப்பு விடுத்து உள்ளார்.

நாளை லண்டன் பயணம்

இந்த அழைப்பை ஏற்று பக்கிங்காம் அரண்மனையில் நடக்கும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க, சைதை துரைசாமி நாளை (திங்கட்கிழமை) லண்டன் புறப்பட்டு செல்கிறார். அவருடன் அவரது மகனும், மனிதநேய மைய இயக்குனருமான வெற்றி துரைசாமியும் விருந்தில் பங்கேற்க உடன் செல்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com