

புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் ரவிக்குமார் எம்.பி. அரசின் கவனத்தை ஈர்த்து பேசியதாவது:-
இந்தியாவில் ரூபாய் நோட்டு அச்சிட ஆரம்பித்து 200 ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு ஜார்ஜ் மன்னரின் உருவப்படத்துக்கு பதிலாக சாரநாத் தூணின் சிங்கத்தலையை ரூபாய் நோட்டில் அச்சிட்டோம். 1969-ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் நினைவாக அவரது உருவம் ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டது. ரூபாய் நோட்டு அச்சிடுவது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொடங்கி இருந்தாலும் நாணயம் அச்சிடும் வழக்கம் மிக நீண்டகாலமாகவே இங்கு நடைமுறையில் இருந்துள்ளது.
ரூபாய் நோட்டு என்பது நமது பொருளாதார கருவியாக இருந்தாலும் அது சமூகக்குறியீடாகவும் திகழ்கிறது. அதனால்தான் மகாத்மா காந்தியடிகளுக்கான நமது மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் அவரது உருவத்தை ரூபாய் நோட்டில் அச்சிடுகிறோம். இப்போது சுதந்திர இந்தியாவின் முழுப்பொறுப்பிலான நிதி மந்திரியாக ஒரு பெண் நியமிக்கப்பட்டதன் மூலம் நாட்டின் பொருளாதார விவகாரங்களை நிர்வகிக்கும் ஆற்றல் பெண்களுக்கு உள்ளது என்பது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
எனவே பெண் ஒருவரின் உருவத்தை அச்சிடுவதற்கு இதுவே சரியான தருணம். இந்தியாவின் முதல் ஆசிரியையான சாவித்ரிபாய் புலேவின் உருவத்தை நமது நாட்டின் ரூபாய் நோட்டில் அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.