குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி சிறை சென்று வந்தவர்களுடன் பிரியங்கா சந்திப்பு: மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி சிறை சென்று வந்தவர்களை பிரியங்கா சந்தித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி சிறை சென்று வந்தவர்களுடன் பிரியங்கா சந்திப்பு: மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
Published on

வாரணாசி,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் போராடிய ஏராளமானோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பலர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதில் வாரணாசியை சேர்ந்த சமூக ஆர்வலர் தம்பதியான ரவி சேகர், ஏக்தா சேகரும் அடங்குவர். தங்கள் ஒரு வயது குழந்தையை விட்டுவிட்டு சுமார் 15 நாட்கள் சிறையில் கழித்த அவர்கள், சமீபத்தில்தான் ஜாமீனில் விடுதலை பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி சிறைசென்று வந்தவர்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று சந்தித்தார். முதலில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்ற அவர் அங்கு ரவி-ஏக்தா தம்பதியை சந்தித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையிலேயே மக்கள் போராடினர். ஆனால் அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளினர். ஏக்தாவின் சிறிய குழந்தை அவருக்காக காத்திருந்தது. அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

தங்கள் நாட்டுக்காக குரல் எழுப்பி வருவோருக்காக பெருமையடைவதாக கூறிய பிரியங்கா, மத்திய அரசின் நடவடிக்கை அனைத்தும் அரசியல்சாசனத்துக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com