குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் மேல்மலையனூரில் போக்குவரத்து பாதிப்பு

குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேல்மலையனூரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published on

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே சிந்திப்பட்டு கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அதில் இருக்கும் தண்ணீரை மின்மோட்டார்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி, தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மின்மோட்டார் பழுது மற்றும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டதால் கிராம மக்கள் குடிநீரின்றி கடும் அவதிபட்டனர்.

இதையடுத்து குடிநீரின்றி தவித்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, பணம் வசூலித்து புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்தனர். அதிலும் தண்ணீர் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யக்கோரி மனு கொடுப்பதற்காக நேற்று காலை காலி குடங்களுடன் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். ஆனால் நேற்று சனிக்கிழமை அரசு விடுமுறை நாள் என்பதால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்தன கிராம மக்கள் தங்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வளத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி கூடிய விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இதனை ஏற்ற கிராம மக்கள், மறியலை விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மேல்மலையனூர்-வளத்தி சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com