

வேலூர்,
வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சத்துவாச்சாரி, வேலப்பாடி, சேண்பாக்கம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் வாக்குசேகரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
5-ந் தேதி (நாளை) நடைபெற இருக்கக்கூடிய தேர்தலில் நாம் பெறவிருக்கும் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்திட முடியாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், வேலூரை தவிர்த்து இந்தியா முழுவதும் நடைபெற்று இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில், ஒட்டுமொத்த கட்சிகளின் விகிதாச்சாரத்தை கணக்கில் எடுத்துப் பார்த்தால் முதல் இடம் நம்முடைய தி.மு.க.வுக்குத்தான் என்று புள்ளி விவரங்கள் ஆதாரத்தோடு சொல்கின்றன.
எதற்காக நான் இதனை சொல்கின்றேன் என்று சொன்னால், நம் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக, அவர்கள் செய்த சூழ்ச்சி, சதி மக்களிடத்தில் எடுபடவில்லை. மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் தான், நம்முடைய தி.மு.க. கூட்டணியின் தமிழக எம்.பி.க்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இன்றைக்கு டெல்லிக்கு சென்று, நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.