வருங்கால வைப்பு நிதி வட்டியை குறைப்பதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்

வருங்கால வைப்பு நிதி வட்டியை குறைப்பதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருங்கால வைப்பு நிதி வட்டியை குறைப்பதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்
Published on

சென்னை,

அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அமைப்பு சார்ந்த ஊழியர்கள் முதலீடு வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.65 சதவீதத்தில் இருந்து 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி வாரியத்தின் இந்த முடிவால் 7 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்படு வார்கள். தொழிலாளர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி வாரியம் என்பது தொழிலாளர்களுக்கு சேவை செய்வதற்கான வாரியமாகும். அந்த வாரியம் அதன் லாபத்தில் குறைந்தது 80 சதவீதத்தையாவது தொழிலாளர்களுக்கு வட்டியாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குவதாக இருந்தால் ஆண்டுக்கு 11.80 சதவீத வட்டி வழங்குவது மிக எளிதில் சாத்தியமாகும்.

அரசின் பெரும்பான்மையான திட்டங்களுக்கு எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு அடுத்தபடியாக தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியம்தான் அதிக நிதியை கடனாக வழங்குகிறது. அதில் தொழிலாளர்களும், அவர்களின் முதலாளிகளும் கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டும் என்பதை, அவர்களின் பலவீனமாகவும், தங்களின் பலமாகவும் பயன்படுத்திக்கொண்டு மிகக்குறைந்த வட்டியை வழங்குவது பெரும் துரோகமாகும். இப்போக்கை வருங்கால வைப்பு நிதி வாரியம் கைவிட வேண்டும்.

எனவே வருங்கால வைப்பு நிதிக்கு குறைந்தது 10 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட வேண்டும். கடன் சந்தை நிலவரம் சிறப்பாக இருந்து அதிக லாபம் கிடைக்கும் போது அதற்கு இணையான வட்டியையும், இல்லாவிட்டால் குறைந்தபட்ச வட்டியையும் வாரியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com