கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்றும், பழுதான மின்மோட்டரை சரி செய்யக்கோரியும் கண்ணமங்கலத்தில் இருந்து படவேடு செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் வாகனங்கள் செல்லாத வகையில் கற்கள் மற்றும் குப்பை தொட்டியை வைத்தனர். இது குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார், இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.