

புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்பவர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல கட்டுப்பாடுகளை விதிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து, புதுச்சேரிக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியைச் சுற்றியுள்ள மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர்களை இ-பாஸ் இருந்தாலும் புதுசேரிக்குள் அனுமதிக்க முடியாது என்றும் பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.