சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பராமரிக்க வேண்டும்


சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பராமரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Oct 2023 4:14 PM GMT (Updated: 12 Oct 2023 4:16 PM GMT)

சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்கவேண்டும் என்று போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

காரைக்கால்

சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்கவேண்டும் என்று போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆலோசனை கூட்டம்

காரைக்கால் மாவட்டத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை சாலை பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார்.

துணை கலெக்டர் ஜான்சன், போலீஸ் சூப்பிரண்டுகள் நிதின் கவ்ஹால் ரமேஷ், சுப்பிரமணியன், பொதுப்பணிதுறை செயற்பொறியாளர்கள் சிதம்பரநாதன், மகேஷ், போக்குவரத்து துறை அதிகாரி அங்காளன், நலவழியத்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் நகராட்சி, கொம்யூன் ஆணையர்கள், லாரி உரிமையாளர்கள் கலந்துகொண்டார்கள்.

37 இடங்களில் வேகத்தடைகள்

கடந்த முறை நடந்த ஆலோசனை கூட்டத்தில், உத்தரவிடப்பட்ட பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டதா? என ஒவ்வொரு அரசுத்துறை அதிகாரிகளிடமும், கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது பேசிய அதிகாரிகள் பொதுப்பணித்துறையின் மூலம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் குறுக்கு சாலைகளில், 37 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 530 ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை மூலம் ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய கலெக்டர் குலோத்துங்கன், சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை முறையாக பராமரிக்க வேண்டும். மாவட்ட எல்லைகளில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். அதிகமாக விபத்துகள் ஏற்படும் இடங்களில் தடுப்புகளை அமைக்கவேண்டும்' என்றார்.


Next Story