புதுப்பேட்டை பகுதியில் வறட்சி தண்ணீரின்றி கருகும் கொய்யா மரங்கள் - விவசாயிகள் கவலை

புதுப்பேட்டை பகுதியில் கடும் வறட்சியால் தண்ணீரின்றி கொய்யா மரங்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
புதுப்பேட்டை பகுதியில் வறட்சி தண்ணீரின்றி கருகும் கொய்யா மரங்கள் - விவசாயிகள் கவலை
Published on

புதுப்பேட்டை,

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான ஏரி, குளங்கள், குட்டைகள் நிரம்பவில்லை. பருவமழை பொய்த்துப்போன நிலையிலும் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீரை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்தனர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் மட்டும் காவிரிநீர் விவசாயிகளுக்கு கைகொடுத்தது. மற்ற இடங்களில் ஒரு போகம் மட்டுமே விளைச்சல் காணப்பட்டது.

பருவமழை காலம் முடிந்ததில் இருந்தே வெயிலின் தாக்கம் தொடங்கியது. குறிப்பாக பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கடலூர் மாவட்டத்தில் வெயில் சுள்ளென சுட்டெரிக்கிறது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலுடன் அனல்காற்றும் வீசுவதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். இதன் காரணமாக மதிய நேரம் பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.

வெயில் சுட்டெரிப்பதால் விவசாயத்துக்கு கூடுதல் நீர் தேவைப்படுகிறது. நீர் நிலைகளில் இருந்த தண்ணீரும் குறைந்து ஏரி, குளங்கள், குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் புதுப்பேட்டை பகுதியிலும் கடும் வறட்சி ஏற்படுகிறது. இதனால் ஒறையூர், காவனூர், பூண்டி, கண்டரக்கோட்டை, அம்மாப்பேட்டை, மணம்தவிழ்ந்தபுத்தூர், ராயர்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கொய்யா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். இதனால் கொய்யா மரங்கள் கருகி வருகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பொதுமக்கள் உண்ணும் பழவகைகளில் கொய்யாவுக்கு தனி இடம் உண்டு. புதுப்பேட்டை பகுதியில் விளையும் கொய்யாப்பழத்திற்கு தனி சுவை உண்டு. ஆனால் மழை பெய்யாததால் விளைச்சல் இல்லை. அதுமட்டுமின்றி நிலத்தடி நீர் மட்டமும் குறைந்ததால், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றியது. இதனால் அந்த மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. மரங்கள் கருகி வருகின்றன. அந்த மரங்களை காப்பாற்றுவதற்காக டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சினோம். ஆனால் அந்த மரங்களுக்கு போதுமானதாக இல்லை. மரங்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. கொய்யா மட்டுமல்ல மற்ற பயிர்களின் நிலையும், இதேபோன்றுதான் உள்ளது.

இவ்வாறு விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com