தூய்மை இந்தியா காந்தியின் கனவை நனவாக்குகிறாரா மோடி?

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் குறித்து ‘தினத்தந்தி’, ‘மாலை மலர்’, ‘தந்தி டி.வி.’, ‘டி.டி.நெக்ஸ்ட்’ இணைந்து மாபெரும் சர்வே ஒன்றை நடத்தியது. நிருபர்கள், புகைப்பட நிபுணர்கள், வீடியோகிராபர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கு சென்றும், புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் மராட்டிய மாநிலம் மும்பையிலும் இந்த கழிப்பறைகள் பற்றிய நிறை, குறைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தனர்.
Published on

நாடு வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருந்தாலும், 21-வது நூற்றாண்டிலும் திறந்தவெளியை கழிப்பிடங்களாக பயன்படுத்தும் அவலநிலை நீடிக்கிறது. வீட்டில் கழிப்பறை வசதிகள் இல்லாத மக்கள் வயல்வெளிகள், காடுகள், ஆறு மற்றும் குளத்தின் கரைகள், ரெயில் தண்டவாள பாதைகள் போன்ற இடங்களை திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்தும் சூழல் இன்னும் உள்ளது. திறந்தவெளியை கழிப்பிடங்களாக பயன்படுத்தி நீர்நிலைகளில் கழுவுவதால் சுகாதார சீர்கேடு பிரச்சினைகள் ஏற்படுகிறது. கோலிபார்ம் என்ற கிருமி உருவாகி மனிதர்களிடையே தொற்றுநோய் பாதிப்புகளை உருவாக்குகிறது. காலரா போன்ற ஆட்கொல்லி நோய்களும் தாக்குகிறது. திறந்தவெளி கழிப்பிடங்கள் போன்ற சுகாதாரமின்மை பிரச்சினையால் நம் நாட்டில் 38.4 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குறைபாடுடனும், 35.7 சதவீத குழந்தைகள் வயதுக்கேற்ற எடை இல்லாமலும் இருப்பதாக தேசிய குடும்ப நல கழகம் தனது 4-வது ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறது.

சுகாதார சீர்கேட்டால் நாட்டில் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் வயிற்று உபாதையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் சுகாதாரமின்றி திறந்தவெளியை கழிப்பிடங்களாக பயன்படுத்தும் மக்கள் பலர் தங்கள் வீட்டிற்கும் கழிப்பறை வசதி கிடைக்காதா? தங்களுக்கு விடிவு காலம் பிறக்காதா? என்று மனதுக்குள் வெம்பி வந்தனர். அவர்களுக்கு அருமருந்தாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் ஆற்றிய சுதந்திர தின விழா உரை அமைந்தது. தூய்மை இந்தியா திட்டத்தை (ஸ்வச் பாரத் மிஷன்) அறிவித்து, அதன் நோக்கங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத இந்தியாவை உருவாக்கவேண்டும். இதற்காக சுகாதாரமான கழிப்பறைகளை கட்டிக்கொடுக்கவேண்டும் என்பது தான் தூய்மை இந்தியா திட்டத்தின் உன்னத நோக்கம் என்றார்.

2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி டெல்லியில் உள்ள காந்தி சமாதி அருகில் இருந்தே தூய்மை இந்தியா திட்டத்தை நரேந்திர மோடி தொடங்கினார். மேலும் இந்த திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் சமீபத்தில் தூய்மைக் கான சேவை என்ற இயக்கத்தையும் நரேந்திர மோடி தொடங்கினார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு தனி நபர் கழிப்பறைகளும், முக்கிய சந்திப்புகளிலும் பொது கழிப்பறைகளும் மத்திய அரசு இலவசமாக கட்டி கொடுத்து வருகிறது. வீடுகளில் கட்டப்படும் கழிப்பறைகளுக்கு நகர்ப்புறங்களில் ரூ.8 ஆயிரமும், கிராமப்புறங்களில் ரூ.12 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.

தற்போது நாடு முழுவதும் 8 கோடியே 66 லட்சத்து 34 ஆயிரத்து 46 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 49 லட்சத்து 90 ஆயிரத்து 706 கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளன.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டி கொடுக்கப்பட்டுள்ள சமுதாய கழிப்பறைகள், தனி நபர் கழிப்பறைகளுக்கு பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் இவ்வாறு கட்டி கொடுக்கப்பட்ட கழிப்பறைகளை சிலர் முறையாக பயன்படுத்தவில்லை, பராமரிக்கவில்லை என்பதே மக்களிடம் நடத்தப்பட்ட சர்வே மூலம் உணர முடிகிறது. திறந்தவெளியில் காற்றோட்டமாக காலை கடன்களை கழித்து பழகிய சிலர் கழிப்பறையை பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுவது இல்லை. சில இடங்களில் கழிப்பறை கட்டிடம் மட்டும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வசதியும், கழிவுநீர் செல்லும் வசதியும் செய்துகொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இதனால் அந்த கழிப்பறைகள் பயன்பாடு இன்றி பழைய சாமான்கள், விறகு போன்ற பொருட்கள் வைக்கும் வெறும் காட்சி பொருளாகவே இருக்கின்றன.

ஒரு சிலர் கழிப்பறையை நல்ல முறையில் பராமரிக்க தவறிவிட்டனர். இதன் காரணமாக அவை பயன்படுத்த முடியாத அளவுக்கு சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. மேலும் சிலர் மானியம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தெரிவிக்கின் றனர். நாடு சுகாதாரமாக இருக்கவேண்டும். நாட்டு மக்களும் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்ற உன்னத நோக்க்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வரும் தூய்மை இந்தியா திட்டம் வெற்றி அடைய அனைவரும் துணை நிற்போம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com