நெல்லை,
காந்தியின் பிறந்தநாளையொட்டி, நெல்லையில் நடந்த தூய்மையே சிறந்த சேவை எனும் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, நெல்லை மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலைக்குகலெக்டர் ஷில்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மாநகராட்சியின் சார்பாக டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்கள் 517 பேர், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் 33 பேர், ஆகியோர்கள் கலந்து கொண்ட தூய்மையே சிறந்த சேவை எனும் விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
நெல்லை மாவட்டத்தில் தூய்மை பாரத திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அதன்படி பள்ளிகள், அரசு அலுவலகங்கள், ரெயில் நிலையம் மற்றும் பஸ்நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள், வியாபாரிகள், சில்லறை வணிகர்கள் என அனைத்து தரப்பினர்களிடத்திலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமாக பிளாஸ்டிக் ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேரணி நெல்லை மாநகராட்சி வளாகம் முன்பு இருந்து தொடங்கி, டவுன் 4 ரதவீதிகள் வழியாக சென்று மீண்டும் மாநகராட்சியை வந்தடைந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் தூய்மை பற்றிய விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.
பேரணியில் மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணநாயர், மாநகர நல அலுவலர் டாக்டர் சதீஷ்குமார், மக்கள் தொடர்பு துறை துணை இயக்குனர் அண்ணா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாநகராட்சி உதவி ஆணையாளர் கீதா, உதவி செயற்பொறியாளர்கள் சாமுவேல் செல்வராஜ், சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.