தலையில் கல்லை போட்டு, துப்புரவு தொழிலாளி படுகொலை - நண்பர் கைது

சிங்காநல்லூரில் தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
Published on

சிங்காநல்லூர்,

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த மாதேஷ் என்பவரின் மகன் சுப்பன் (வயது 28), துப்புரவு தொழிலாளி. கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டில் தங்கியிருந்து, வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சுப்பன், நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தின் பின்புறம் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், பிணமாக கிடந்தது சுப்பன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. ஆனால் நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் போலீசார் பிணத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.

அப்போது சுப்பனின் நண்பரான வரதராஜபுரம் செட்டியார் தோட்டத்தை சேர்ந்த நடராஜ் மகன் சக்திவேல் என்ற கதிர்வேலை(27) பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சுப்பனை தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கதிர்வேலை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

நண்பர்களான நானும், சுப்பனும் தினமும் சேர்ந்து மது குடிப்பது வழக்கம். அதன்படி நேற்று இரவும் (நேற்று முன்தினம்) ஒன்றாக அமர்ந்து மது குடித்தோம்.

அப்போது குடிபோதையில் 2 பேருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது சுப்பன் எனது தாய் குறித்து அவதூறாக பேசினார். இதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.

உடனே ஆத்திரத்தில் சுப்பனை கீழே தள்ளினேன். குடிபோதையில் கீழே கிடந்த சுப்பனின் தலையில், அருகில் கிடந்த கல்லை தூக்கி போட்டேன்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். உடனே நான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். ஆனாலும் போலீசார் என்னை பிடித்துவிட்டனர்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com