புதுடெல்லி,
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இன்பதுரை வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த தொகுதியின் தபால் வாக்குகள் மற்றும் கடைசி 3 சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன்பிறகு இன்பதுரை விடுத்த வேண்டுகோளை ஏற்று, மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட டிசம்பர் 11-ந் தேதி (நாளை) வரை சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வில் இன்பதுரை தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, தான் அவசர வேலையாக வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் நாளை (புதன்கிழமை) நடைபெற இருக்கும் விசாரணையை 16-ந் தேதிக்கு ஒத்திவைக்குமாறு முறையிட்டார்.
அதற்கு நீதிபதிகள், 16-ந் தேதியன்று வேறு விசாரணை இருப்பதால், இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற ஜனவரி மாதத்துக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக கூறியதோடு, மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட ஏற்கனவே பிறப்பித்துள்ள தடை தொடரும் என்றும் அறிவித்தனர்.