ரெயில் விபத்தில் மகனை இழந்த ஆத்திரத்தில் மின்சார ரெயில்கள் மீது கல் வீசியவர் கைது

ரெயில் விபத்தில் மகனை இழந்த ஆத்திரத்தில் ஓடும் மின்சார ரெயில்கள் மீது கற்களை வீசியவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
Published on

மும்பை,

மும்பையில் கடந்த மாதம் சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்த மின்சார ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் அஜய் குமார் என்பவர் பயணம் செய்தார். ரெயில் விக்ரோலி- காஞ்சூர்மார்க் இடையே சென்றபோது, தண்டவாளத்தில் நின்ற மர்மநபர் எறிந்த கல் அஜய்குமாரின் முகத்தை பலமாக தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்து ராஜவாடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து குர்லா ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கல் வீசிய நபரை வலைவீசி தேடிவந்தனர்.

இந்தநிலையில் போலீசார் சந்தேகிக்கும் வகையில் சம்பவம் நடந்த இடத்தில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

இதில், பிடிபட்டவர் விக்ரோலி தாகூர் நகரை சேர்ந்த கிருஷ்ணா சேலேதி(வயது55) என்பது தெரியவந்தது. கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இவரது மகன் விக்ரோலி-காஞ்சூர்மார்க் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த இழப்பை தாங்க முடியாத அவர், மகன் ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இடத்திற்கு அவ்வப்போது சென்று ஆத்திரத்தில் ரெயில்கள் மீது கற்களை வீசி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதால் அவருக்கு மனநல டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com