கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை, அதிகபட்சமாக சிதம்பரத்தில் 59 மில்லி மீட்டர் பதிவு

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 59 மில்லி மீட்டர் மழை பதிவானது.
Published on

கடலூர்,

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 16-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்தது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.

பருவமழையின் தொடக்க காலத்தில் மிதமான மழை பெய்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 17 சென்டி மீட்டர் மழை பெய்தது. இதனால் மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. குடியிருப்பு பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்ததால் சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் 10 முகாம்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப் பட்டது.

அதன்படி கடலூரில் நேற்று காலை வெயில் சுள்ளென சுட்டெரித்தது. பின்னர் வானத்தில் கருமேகங்கள் திரண்டு இருள்சூழ்ந்ததால் பலத்தமழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் காலை 8.15 மணி முதல் விட்டு விட்டு மழை தூறிக்கொண்டே இருந்தது. மழையால் மாவட்டத்தில் 4 ஆடுகள், 1 கன்று குட்டி, 2 பசுமாடுகள் செத்தன.

அதேபோல் சேத்தியாத்தோப்பு, புவனகிரி, அண்ணாமலைநகர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, பெண்ணாடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் குறிஞ்சிப்பாடியில் உள்ள பெருமாள் ஏரி நிரம்பியதையடுத்து, ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சத்திரம் பகுதியில் சுமார் 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமானது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 59 மில்லி மீட்டரும், குறைந்த பட்சமாக காட்டுமயிலூரில் 4 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 21.45 மில்லி மீட்டர் பதிவானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com