கூரை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது: நிவாரண உதவி கிடைக்காமல் மக்கள் அவதி போராட்டத்தில் ஈடுபட முடிவு

கும்பகோணம் அருகே கூரை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு அரசின் நிவாரண உதவி வழங்கப்படவில்லை. மழைநீரை விரைந்து அப்புறப்படுத்தி உரிய நிவாரண உதவிகள் வழங்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபட போவதாக மக்கள் அறிவித்து உள்ளனர்.
Published on

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை வீரசோழன் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்காக ஆற்றின் கரையோரம் வசித்து வந்த 15 குடும்பங்களை சேர்ந்தவர்களை காலி செய்யும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி இடத்தை காலி செய்த அவர்களுக்கு அங்கு உள்ள ஒரு திருமண மண்டபத்தின் பின்புறம் இடம் ஒதுக்கப்பட்டது.

அங்கு அவர்கள் கூரை வீடுகள் அமைத்து வசித்து வந்தனர். இந்த பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அவர்களின் கூரை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மழைநீரில் நனைந்து வீணானது.

மண்டப வாசலில்...

அப்பகுதியில் கூரை வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீர் வடியாததால் மக்கள் திருமண மண்டபத்தின் வாசலில் குழந்தைகள் மற்றும் தாங்கள் வளர்த்து வரும் ஆடு, மாடுகளுடன் வசித்து வருகிறார்கள். குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட அவர்களுக்கு செய்து தரப்படவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு அரசின் நிவாரண உதவியும் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உரிய நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com