மத்தியில் மட்டுமின்றி மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராமகிருஷ்ணன் பேச்சு

மத்தியில் மட்டுமின்றி மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராமகிருஷ்ணன் கூறினார்.
Published on

குளித்தலை,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி (தி.மு.க.) சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று குளித்தலையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மோடி பிரதமரான பிறகு இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான ஜனநாயகம் தகர்க்கப்பட்டு வருகிறது. மக்கள் நலனுக்கு எதிராக அன்னிய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். தேசதுரோக சட்டத்தை ரத்து செய்யவேண்டுமென நேரு அறிவித்திருந்தார். ஆனால், தற்போது மோடியை விமர்சித்தால் தேசதுரோக வழக்கில் கைது செய்கிறார்கள். சி.பி.ஐ, நீதித்துறை, மத்திய தணிக்கைதுறை உள்பட அனைத்து துறைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு மோடி செயல்பட்டு வருகிறார்.

நீட் தேர்வு கூடாது என தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட பா.ஜ.க. அரசுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது. பிரதமர் மோடி அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக தெரிவித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா?. ஜி.எஸ்.டி.யால் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்திய ராணுவத்தின் சாதனை மோடி அரசின் சாதனை அல்ல. ராணுவத்தின் சாதனையை தன்னுடைய சாதனையாக கூறக்கூடாது.

சில மாதங்களுக்கு முன்புவரை தம்பிதுரை, பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று விமர்சித்தார். அ.தி.மு.கவை பா.ம.க. தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் விமர்சித்தன. தற்போது ஒரே கூட்டணியில் அனைவரும் உள்ளனர். தி.மு.க. தேர்தலுக்காக அமைந்த கூட்டணி அல்ல. பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் மட்டுமல்ல, மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com