மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை ஜாமீனில் விடுவிக்க அமெரிக்க வக்கீல் எதிர்ப்பு - ‘‘இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படும்’’

மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை ஜாமீனில் விடுவித்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படும் என்று அமெரிக்க அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை ஜாமீனில் விடுவிக்க அமெரிக்க வக்கீல் எதிர்ப்பு - ‘‘இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படும்’’
Published on

மும்பை,

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, மும்பையில் பல்வேறு இடங்களில் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 166 பேர் பலியானார்கள். சுமார் 300 பேர் காயமடைந்தனர்.

லஸ்கர் இ தொய்பாவுடன் சேர்ந்து இத்தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியரான தஹாவூர் ராணா ஆவார். கொலை, கொலைச்சதி, மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக அவர் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

மீண்டும் கைது

அதே சமயத்தில், டென்மார்க் பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில், ராணாவுக்கு அமெரிக்க கோர்ட்டு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தஹாவூர் ராணா கூறியதால், கருணை அடிப்படையில் அவரை விடுதலை செய்ய சமீபத்தில் அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இருப்பினும், இந்தியா விடுத்த வேண்டுகோளின்பேரில், கடந்த 10-ந் தேதி அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜாமீன் தரக்கூடாது

அவர் சார்பில் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனு, 30-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அமெரிக்க அரசு தரப்பில் 26-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க அரசு வக்கீல் ஜான் லுலேஜியன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தஹாவூர் ராணா, இந்தியாவால் தேடப்படுபவர். அவரை ஜாமீனில் விடுதலை செய்து, கனடா செல்ல அனுமதித்தால், அவர் மீண்டும் கோர்ட்டுக்கு வர மாட்டார். எனவே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு முடிவடையும்வரை, ஜாமீன் அளிக்கக்கூடாது.

இந்திய உறவு சீர்குலையும்

மேலும், அவரது உடல்நிலை விமானத்தில் பயணம் செய்ய ஏற்றதாக இல்லை. அவர் கனடா சென்று விட்டால், இந்தியாவுடனான அமெரிக்க உறவு சீர்குலையும். அமெரிக்காவுக்கு தர்மசங்கடம் ஏற்படும். அவர் இந்தியாவில் மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையை எதிர்கொண்டால், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கிடைக்க வாய்ப்புள்ளது. அதில் இருந்து தப்பிக்கவே கனடா செல்ல திட்டமிட்டுள்ளார்.

ஏனென்றால், கனடா-இந்தியா இடையே கைதிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் இல்லை. எனவே, ராணாவுக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com