இடஒதுக்கீடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் கி.வீரமணி பேட்டி

உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
Published on

தர்மபுரி,

தர்மபுரியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உயர்சாதியினரின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக பா.ஜனதா அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அவசர அவசரமாக வழங்கி உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது.

இந்த நிலையில் மீதமுள்ள 31 சதவீத இடங்களுக்கு அனைத்து பிரிவினரும் திறந்த நிலையில் நேரடியாக போட்டியிட்டு வாய்ப்புகளை பெறும் நிலை இருந்தது. தற்போது உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் நேரடி போட்டிக்கான வாய்ப்பு இடங்கள் 21 சதவீதமாக குறையும்.

இதை எதிர்த்து திராவிடர் கழகம், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், சமூகநீதிக்கு குரல் கொடுக்கும் அனைவரையும் திரட்டி பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

இந்து சமய அறநிலையத்துறை அரசியல் அமைப்பு சட்டப்படி கோவில்களில் முறைகேடுகளை தடுப்பதற்காக செயல்படும் தணிக்கை துறையாகும். மழைவேண்டி யாகம் நடத்துவது அந்த துறையின் பணி அல்ல. இதுதொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை தனக்கு தோன்றியதை பேசுகிறார். அவருக்கு சட்ட அறிவு தேவை. வரலாற்றை படித்து விட்டு அவர் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com